• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
277
உண்மை காதல் நீ என்றால்


ஆராதனா கணவனின் வருகைக்காக வாசலில் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தாள்.

29 வயது பெண்.. 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது .கணவன் சியாம் சுந்தர் அழகானவன். கம்பீரமானவன்.

வீட்டில் பார்த்து பிடிவாதமாக அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டவன்.

தூரத்து உறவினரும் கூட.. ஆரம்பத்தில் நிறைய பிடித்தம் இல்லாமல் இல்லற வாழ்க்கை துவங்கியிருந்தாலுமே இப்போது அவன் என்றால் உயிர் இவளுக்கு.. அதற்கு காரணமும் நிறையவே இருந்தது .

இன்றைக்கு ஆர்வமாக காத்திருக்க ஒரு முக்கிய காரணம் இருந்தது .

வெற்றிகரமாக இவள் பி ஹெச் டி முடித்து இருந்தாள்.

அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.

நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர அவன் வருவதற்கான அடையாளம் தெரியவில்லை .

ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு சென்றவன் தான். ஆனால் இன்றைக்கு இன்னும் வரவில்லை .

சற்று ஆர்வமாக காத்திருந்தாள் .5 வயது மகள் அருகே வந்து “அம்மா பசிக்குது ஏதாவது கொடு” என்று கேட்க,

“பிஸ்கட் தரவா.. அப்பா இப்போ வந்திடுவாங்க .அப்பா வந்ததும் உனக்கு ஏதாவது செஞ்சு தரேன்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரியாக சியாம் சுந்தர் வந்திருந்தான்.

அவனை பார்க்கவுமே இவள் பதறி விட்டாள் .

“என்னங்க என்ன ஆச்சு.” கேட்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது .

“அழுதிடாத..ஒன்னும் இல்ல..”

“என்ன இப்படி சொல்றீங்க ஒன்னும் இல்லன்னு.. கையில கட்டு போட்டு இருக்கீங்க .

அங்க அங்க சிராய்ப்பு வேற இருக்குது .என்னதான் ஆச்சு.. “

“ஆராதனா வரும் போது சின்ன ஆக்சிடென்ட் .நான் எதிர்பார்க்கல.”

“என்னங்க சொல்றீங்க” கேட்கும் போதே கண்ணீர் வழிந்திருந்தது.

“ஏய் அழுகாத ஒன்றும் இல்லை பாரு ..நான் நல்லா தான் இருக்கிறேன் .”

“சும்மா எதையாவது சொல்லாதீங்க.. எவ்வளவு வலிச்சிருக்கும் .முகமெல்லாம் சிராச்சி இருக்குது. கையில வேற கட்டு போட்டு இருக்கீங்க. பெரிய காயமா என்ன ?”

“இல்லடி சின்ன காயம் தான் தோலோட சிறைச்சிடுச்சு.. வண்டி ஸ்கிட்டாக்கி கீழே விழுந்துட்டேன்.”

“என்னதான் நடந்துச்சு. பார்த்து வர மாட்டீங்களா “.

“என்னத்த சொல்றது ரோட்ல நாம சரியா போனா கூட ஆப்போசிட்ல வர்றவன் சரியா வரணும்ல .ஒரு குடிகாரன் வண்டிய ஓட்டிட்டு வந்தவன் என் மேல வண்டியை விட்டுட்டான்.. வண்டி மோதி சறுக்கி விழுந்துட்டேன். அதுல தான் அடிபட்டுடுச்சு. என்ன செய்றது காலம் இப்படி இருக்குது.” அவன் சொல்லுவுமே இவளுக்கு கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“எனக்கு அடிபட்டது கூட வலிக்கல நீ இப்படி அழுவேன்னு நினைக்கும் போது மனசு கஷ்டமா இருந்தது .உன்னை எப்படி சமாதானப்படுத்துவதுன்னு நினைச்சிட்டே வந்தேன். ஒன்னும் இல்ல ரெண்டு நாள்ல சரி ஆயிடும்.”என்றபடி இவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

வீட்டின் உள்ளே ஷோபாவில் அமர்ந்த பிறகும் அவனைத் தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஒன்னும் இல்லடி சொல்றேன்ல..”

உங்களுக்கு ஏதாவதுனா என்னால தாங்க முடியாதுங்க.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது.”

“அடடா விடு விடு எல்லாம் சரியாயிடும் குட்டி செல்லத்தை கூப்பிடு. அவ வந்தா நீயுமே சரி ஆயிடுவ ..”

“அப்பா வந்துட்டீங்களா “..மொத்த பொம்மைகளையும் அறைக்குள் கொட்டி இருந்தவள் தந்தையைப் பார்த்து ஓடி வர.. “அப்பாவுக்கு அடிபட்டு இருக்குது .பக்கத்துல வராத” என்று கூறினாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ வாடா ராஜாத்தி” என்று மகளை தன்னோடு இருக அணைத்துக் கொண்டான்.

அந்த நிமிடத்தில் இருந்து ஆராதனா அவனை விட்டு நகரவே இல்லை .

அவனை குழந்தை போல தாங்க ஆரம்பித்தாள். இவனுக்கோ சிரிப்பு வந்தது.

“நீ என் மேல எந்த அளவுக்கு உயிரா இருக்கிறேன்னு எனக்கு நல்லா தெரியும். எனக்கு ஒன்னும் இல்ல ஆராதனா..”


“நீங்க சும்மா இருங்க. என்னால உங்களை இப்படி பார்க்கவே முடியல .

குடிச்சுட்டு சாகுறதுன்னா எங்கேயாவது போய் சுவத்துல முட்டிக்கிட்டு சாகறது தானே.. ஆட்கள் மேல தான் இவனுங்களோட திமிரை காட்டுவார்களா..”

“இப்படி எல்லாம் சொல்லாத ..இந்த அரசாங்கமே அந்த டாஸ்மார்க்கை நம்பி தான் நடந்துகிட்டு இருக்கு தெரியுமா..

அதை போய் நீ குறையா சொல்ற ..”

“சும்மா இருங்க எனக்கு கடுப்பா இருக்குது .ரோட்டுல நிம்மதியா வண்டில போகவே முடியறதில்ல .

எப்போ எந்த பக்கம் வந்து இடிப்பாங்கன்னு இருக்கு .அது மட்டுமா ரோட்ல கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம துணி விலகுவது கூட தெரியாம விழுந்து கிடக்குறானுங்க ..

இவனுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா.. ஒரு பக்கம் சாராயம் விக்கறாங்க.. சரி குடிக்கிற இவனுங்களுக்கு அறிவு எங்க போச்சு .

இவர்களை நம்பியும் குடும்பம் குழந்தைன்னு இருப்பாங்கல்ல .

அவங்கள எல்லாத்தையும் நட்டாத்துல விட்டுருவாங்களா..” கோபமாக சொல்ல,” சரி சரி இது எல்லாம் நம்ம சொல்லக்கூடாது .இதெல்லாம் அவங்க அவங்களுக்கு புரியணும் ‌அதை விடு நீ எதுவோ முக்கியமான விஷயம் பேசணும்னு போன் பண்ணி இருந்த..என்ன அதை சொல்லு “.

“ஒன்னும் இல்ல எனக்கு இப்போ அதை சொல்ற மூடே இல்ல .விடுங்க இன்னொரு நாள் பார்க்கலாம் .”

“ஆராதனா என்ன விஷயம் சொல்லு .நான் உன்கிட்ட தான் கேட்கிறேன் .”

“ஆசை ஆசையா என்னை படிக்க வச்சீங்க இன்றைக்கு பிஎச்டி கம்ப்ளீட் ஆயிடுச்சு அப்படின்னு காலேஜிலிருந்து கூப்பிட்டு சொன்னாங்க .

எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா. எல்லாத்துக்குமே காரணம் நீங்கதான்.. நீங்க என் மேல வச்சிருக்கிற பாசம் தான்.. “

“ஆராதனா அன்பு கொடுத்தா அன்பு பல மடங்கு திரும்ப கிடைக்குமாம்.

அது உண்மைதான் இதோ எனக்கு நீ கிடைச்சிருக்கறியே.. நான் எவ்வளவு நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்கிறேன் தெரியுமா .எனக்கு இது போதும்” என்று சொன்னவன் அங்கிருந்து டிவியை ஆன் செய்ய.. அதில் முக்கிய செய்தியாக கீழே வந்து கொண்டிருந்தது..

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து கொண்டிருந்த பிரபல ரவுடி மார்க் மணி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.. அவனை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்க முற்பட.. தங்களைக் காப்பாற்ற வேண்டி போலீசார் திரும்ப சுட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டான்.

செய்தியை பார்த்த ஆராதனா அப்படியே திகைத்து அதிர்ச்சியோடு சியாமை பார்த்தாள்.

நினைவுகள் பின்னோக்கி நகர ஆரம்பித்தது ஆராதனாவிற்கு..

ஆராதனா.. தாய், தந்தை இருவருக்கும் செல்ல மகள்.. பெரிய வசதி எல்லாம் கிடையாது .மிடில் கிளாஸ் வகுப்பில் சார்ந்தவள் தான் இவள் படித்தது கூட தமிழ் வழி கல்விதான்..

அரசாங்க பள்ளி எனும் போது அங்கே படித்தவர்கள் அனைவருமே மிடில் கிளாஸை சேர்ந்தவர்கள் தான் .

அங்கே ஒரு வழக்கம் இருந்தது படிக்கின்ற மாணவி ஒவ்வொருவருமே மற்றவர்களுக்கு முன்னால் தான் வித்தியாசமானவள் என்று காட்டிக் கொள்வதற்காக ஒவ்வொரு பெண்ணுமே தனக்கு பிடித்த மாணவர்களோடு சுற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

அதிலும் சற்றே ரவுடி போலவோ, சண்டை இடுப்பவன் போலவோ இருப்பவனை தன்னுடைய ஆள் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டனர் .

ஏன் அதுதான் காதல் என்று கூட நினைத்தனர் .

இவளும் கூட அப்படி ஒரு சூழ்நிலையில் தான் இருந்தாள்.

பிளஸ் டூ படிக்கின்ற ஆரம்பக் காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இவளுக்கு பின்னால் ஒரு பையன் இவளை பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தான்..

ஒரு கட்டத்தில் பேச ஆரம்பிக்க அது நாளடைவில் வளர ஆரம்பித்தது .

இவளுக்கும் அப்போதெல்லாம் அத்தனை மகிழ்ச்சி ..

அவன் பெரிய அழகன் எல்லாம் கிடையாது.. பார்க்கவே பொறுக்கி போன்ற தோற்றம்தான் ஆனாலும் ஏனோ அந்த வயது பெண்களுக்கு அவனைப் போலத்தான் ஆண்களை பிடித்தது .

ஒருவேளை அந்த நேரத்தில் வந்த திரைப்படத்தின் தாக்கமாக கூட இருக்கலாம்.

இப்போதெல்லாம் பொறுக்கியாக, கொலைகாரனாக சுற்றுபவனை தானே ஹிரோவாக காட்டுகிறார்கள் அதுபோலத்தான் இவளும் நினைத்தாலோ..

எல்லாமே ஆறு மாத காலம் தான் .

இவளது பிளஸ் டூ பரீட்சை முடியும் தருவாயில் வீட்டிற்கு தெரிந்து விட்டது .

வீட்டிற்கு தெரிந்த பிறகு பெரிய பிரச்சனையே உருவானது.

இவளோடு பேசிக்கொண்டு இருந்தவனின் பெயர் மேல் நிறைய போலீஸ் கேஸ் இருந்தது.. போதை மருந்து கடத்தும் வழக்கு கூட இருந்தது.

அது மட்டுமல்ல கொலை முயற்சி வழக்கும்கூட அவனின் பெயரில் இருந்தது.

அது எல்லாமே இவளுக்கு பெரியதாக தெரியவில்லை. பிடிவாதமாக அவனை நான் காதலிக்கிறேன் .திருமணம் செய்து கொண்டால் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.

இது எல்லாமே அவளுக்கு தவறாக தெரியவில்லை.

என்னால் அவனை திருத்திவிட முடியும். நான் அவனைத் தான் திருமணம் செய்வேன். கிட்டத்தட்ட ஒரு வருடமாக எனக்கு தெரியும் என்று சண்டையிட ,ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் இவளை கிட்டத்தட்ட மிரட்டி சியாம் சுந்தருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
277
திருமணத்திற்கு முன்பாகவே சியாமிடம் எல்லா விஷயத்தையும் ஆராதனாவின் தந்தை கூறி இருக்க, அவனுமே முழு மனதோடு தான் திருமணம் செய்து கொண்டது.

திருமணம் முடியவுமே இவளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு குடியேறி இருந்தான்.

ஆரம்பத்தில் நிறைய சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலுமே காலப்போக்கில் சியாமின் அன்பினால் முழுவதுமாக அவள் மாறி இருந்தாள்.

ஆராதனாவின் உலகம் சிறியது. முன்பு பள்ளியில் படிக்கும் போது வீடு, அதை விட்டால் பள்ளி கூடவே சில நண்பர்கள் அவ்வளவுதான் .

அதை தாண்டி எதையும் யோசித்தது கிடையாது .ஆனால் சியாம் இங்கே வந்த பிறகு ஒவ்வொன்றையுமே இவளை யோசிக்க வைத்தான் .

தன்னை சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைத்தான்.

உண்மை காதல் எப்படி இருக்கும் என்பதையும் அவனது அன்பால் இவளுக்கு புரிய வைத்தான்.

மெல்ல மெல்ல யோசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய தவறுமே நிறையவே புரிந்தது இவளுக்கு..

சியாமின் மேல் சிறு நீர் துளி போல தூறலாக ஆரம்பித்த காதல் இன்று பெரும் அருவியாக ஆர்ப்பரித்து கொட்ட ஆரம்பித்திருந்தது.

ஒருநாள் பழைய காதலை சொல்லி இவனை கட்டி அணைத்து தன்னுடைய தவறை புரிந்து கொண்டதாக கூறி உண்மையைக் கூட கூறி இருந்தாள்..

“உன் மனசை உறுத்திகிட்டு இருந்த இந்த விஷயம் வெளியே வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.

நான் உண்மையிலேயே உன் மேல உயிரா இருக்கிறேன் .உன்னை சின்ன வயசுல இருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும் .

நான் ஒரு வகையில் தூரத்து சொந்தம் தான் .உன்னை நிறைய முறை பார்த்திருக்கிறேன் .

உன்னை பற்றி உன்னோட அப்பா என்கிட்ட வந்து பேசும் போதே உன்னோட விஷயம் எல்லாத்தையுமே சொல்லிட்டாங்க.

அதெல்லாம் காதலே கிடையாது ஆராதனா .அது ஒரு இன கவர்ச்சி .நம்ம செய்யறது தான் சரி என்கிற மாதிரி ஒரு எண்ணம் .அது அந்த வயசுல ஏற்படறது தான் .அதுதான் உனக்கும் ஏற்பட்டது .ஆனா எனக்கு நம்பிக்கை இருந்துச்சு எப்ப நான் உன்னை கல்யாணம் பண்ணினேனோ அந்த நிமிஷமே எல்லாமே மாறிடும்னு.. இதோ மொத்தமா மாறிட்டியே எனக்கு இது போதும்.

உண்மையான காதல் இதுதான்.. இதை விட எனக்கு என்ன வேணும் .நிறைவான ஒரு வாழ்க்கையை இன்றைக்கு வரைக்கும் உன் கூட வாழ்ந்து இருக்கிறேன் .

இது எல்லாமே திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இவர்கள் பேசிக் கொண்டது .

இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரது பிணைப்புமே இன்னும் அதிகமாகி இருந்தது.

அதன் பிறகு தான் குழந்தை உருவானது .

இதோ ஐந்து வயதில் அழகாக இவர்களின் காதலுக்கு இலக்கணமாக துறு துறு என சுற்றிக் கொண்டிருக்கிறாள்..

எப்போது இவனை, இவனது அன்பை புரிந்து கொண்டாளோ அப்போதே தன்னுடைய தவறு ஆராதனாவுக்கு புரிந்திருந்தது.

சிறிது நாட்களிலேயே சில விவரங்கள் புரிய ஆரம்பித்தது.

இவளை காதலிப்பதாக சொல்லியவன் முதலில் ஒரு வழிப்பறி கேஸில் ஜெயிலுக்கு சென்றிருந்தான். பிறகு அடுத்தடுத்து அவ்வப்போது செய்தித்தாள்களில் அவனைப் பற்றிய செய்தி வந்து கொண்டு தான் இருந்தது .

அவன் இருந்த இடத்திலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூட செய்தி வந்தது..

குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதாக, கஞ்சா விற்றதாக என்று நிறையவே செய்திகள் அவ்வப்போது அவனுடைய புகைப்படத்தை தாங்கி செய்தித்தாளில் வந்து கொண்டு தான் இருந்தது.

சில நேரம் பார்த்து விட்டு நகர்ந்து விடுவாள் .

அந்த வயதில் தன்னுடைய அறியாமையை நினைத்து வருந்துவதா.. அல்லது அந்த வயது பெண்களின் மனநிலை இப்படி இருக்கிறதா? என நிறைய நேரம் யோசித்து இருக்கிறாள் விடை தான் இவளுக்கு கிடைத்ததே இல்லை.

இன்றைக்கு செய்தியை பார்க்கையில் பதற்றத்தை தாண்டியும் சற்று பரிதாபம் தோன்றத்தான் செய்தது.

இறந்ததாக கூறப்பட்டவனின் மனைவி அழுது கொண்டே பேசிய வீடியோவும் டிவியில் ஒளிபரப்பாக.” எனக்கு ஒன்றரை வயசுல ஒரு குழந்தையும் , ஐந்து வயசுல ஒரு குழந்தையும் இருக்குது .

இந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் .

நான் பல முறை அவன் கிட்ட சொல்லிட்டேன் .இந்த மாதிரி எதுவும் செய்யாதேன்னு எதையுமே கேட்கல .

நானும் அவன் மேல ஆசை பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் .அதுக்கான தண்டனை தான் இதெல்லாம்..

தயவு செஞ்சு பொண்ணுங்க யாரும் என்னை போல தப்பு செய்யாதீங்க..

புரியாத வயசுல காதல்னு நினைக்கிற எதுவுமே காதல் கிடையாது .

என்ன பெத்தவங்களும் நிறைய சொன்னாங்க. உனக்கு இந்த பையன் வேண்டாம் .நீ நல்லாவே இருக்க மாட்ட ..

அவன் நல்லவன் இல்ல. உன்னை நிச்சயமா வச்சு காப்பாத்த மாட்டான்னு சொன்னாங்க .நான் கேட்கவே இல்லை .

என்னவோ அவன் பெரிய ஹீரோ மாதிரி நினைச்சுக்கிட்டு அவனை கல்யாணம் பண்ணினேன் .

கல்யாணம் பண்ணின நாள்ல இருந்து தினம் தினம் சித்ரவதை தான் .

கஞ்சா அடிச்சிட்டு நிறைய நாள் என்னை அடிச்சிருக்கிறான் .ஆனா இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தானே.. அதனால நான் அவனை விட்டுட்டு போகல ..

ஆனா இன்னைக்கு அவன் என்னை விட்டுட்டு மொத்தமா போயிட்டான். இந்த குழந்தைகளை வச்சுட்டு என்ன செய்வேன்னு தெரியல .

நான் பண்ணின தப்புக்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான்..

என்னோட வாழ்க்கை என்னை போல பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்” என்று சொல்ல , அந்த இடத்தில் இருந்து தப்பித்து வந்திருந்த ஆராதனா சிலையாக செய்தியை பார்த்தபடி நின்று இருந்தாள்.

தாய் தந்தை மட்டும் பிடிவாதமாக அந்த நேரத்தில் இவளை தடுத்து சியாமிற்கு திருமணம் செய்து கொடுக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு அந்த இடத்தில் இவள் நின்று இருப்பாள்.

அதை யோசிக்க கூட இவளால் முடியவில்லை.

காதல் என்று இன்றைய பெண்கள் நினைப்பது இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையா..

சமூக ஊடகம் மட்டுமல்ல திரைப்படங்கள் கூட இதைத்தானே பெரிதுபடுத்தி காட்டுகிறார்கள் .

இங்கே புகை பிடிப்பதும் குடிப்பதும், போதை மருந்து உட்கொள்வதையும் தான் ஹீரோயிசமாக காட்டுகிறார்கள் அதனுடைய பாதிப்பு தான் இதுவெல்லாமா…!!

மாற வேண்டியது இங்கே யார்..

பெண்களா…?

இதுதான் காதல் என்று புரியாமல் நெருப்பை நோக்கி செல்லும் விட்டில் பூச்சிகளைப் போல தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் பெண்ணின் மனநிலை எப்படிப்பட்டது..?

நினைக்கையில் இவளுக்கு பயமாக இருந்தது.

அதிலும் பெண் குழந்தையை வைத்திருப்பவர்களின் மனநிலையை சொல்ல வேண்டுமா..!

ஆனால் அதையும் தாண்டி சியாம் போல ஒரு ஆண்மகன் காதலனாக, கணவனாக கிடைத்து விட்டால் அந்த பெண்ணிற்கு வேறு என்ன வேண்டும் .

கிரீடத்தில் ஜொலிக்கின்ற வைரத்தை போல தானே ஜொலிப்பாள்.. பயத்திலும் சில நம்பிக்கை துளிர்த்தது.

உண்மை காதல் நீ என்றால்..

வேறு என்ன வேண்டும் உலகத்தில்..


முற்றும்.

கவிசெளமி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
போட்டியில் வெற்றி 💐 💐 💐 பெற வாழ்த்துகள் ராஜி
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
நிறைய பெண்கள் இப்ப இப்படித்தான் தப்பான முடிவு எடுத்துத் தவறான பாதையில் செல்கின்றனர். ரவுடிசம் ஆணுக்கு அழகல்ல ஆபத்து என்பதை உணருவதில்லை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ராஜி💐💐💐
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top